ஜல்லிக்கட்டு ஆதரவாக திரைத்துறையினர் குரல்!!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரைத்துறையினர் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம். ஜல்லிக்கட்டில் காளைகள் வதைக்கப்ப டுவது இல்லை என்றும், ஏறுதழுவுதல் என்ற பெயரில் தமிழர்கள் பாரம்பரியமாக நடத்தி வந்தது. இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார்கள்.
திரைத்துறைய சேர்ந்த கமல்ஹாசன், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், ஆரியா, ஆதிக் ரவிச்சந்திரன், சூரி, விவேக், ஜீ.வி.பிரகாஷ், சின்மயி மற்றும் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு:
கமல்: ஜல்லிக்கட்டு என்பதை விட ஏறுதழுவுதல் என்பது தான் சரியான பெயர். வெவ்வேறு பெயர்களில் மாடுபிடித்தல் என்று கூட சொல்வார்கள். மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க விரும்பினால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள். ஜல்லிக்கட்டு போட்டிக்கான தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டியை மறுபடியும் தொடங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சிம்பு: தனது டுவிட்டர் பக்கத்தில் ”ஜல்லிக்கட்டு தமிழனின் கலாசார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது. ஏதோ சில தனிப்பட்ட நபர்களும், சில தன்னார்வ அமைப்புகளும் தங்களுடைய விலாச தேவைக்காக அதிகாரத்தில் இருப்போரையும், நீதித் துறையையும் தவறான தகவல்கள் மூலம் வழி நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை நடத்தவிடாமல் செய்கின்றனர். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக்கூடாது. இது நம்மொழி, நம் கலாசாரம், நம் பாரம்பரியம் எவருக்கும் எப்பொழுதும் வீட்டுக் கொடுக்க மாட்டோம்.’’
ஜீ.வி.பிரகாஷ்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ”கொம்பு வச்ச சிங்கம்டா” என்ற பாடலை இசையமைத்து வெளியிட இருப்பதாகவும் அந்த பாடல் மூலம் கிடைக்கும் வருமானத்தை கஷ்டப்படும் விவசாயிகளுக்கு அளிக்கப்போவதாகவும் டுவிட்டரில் அறிவித்து இருக்கிறார்.
சூர்யா: 200 வகையான காளைகள் இருந்த நம் நாட்டில், இப்போது 30 வகை காளை கூட இல்லை என்கிறார்கள். அவைகள் அப்படியே அழிந்து கொண்டிருக்கின்றன, எப்படி நாம் பராமரிக்கப் போகிறோம் என்பது தான் எனது முதல் கேள்வியாக இருக்கிறது. ஏறுதழுவுதல் என்பது நமது கலாச்சாரத்தோடு, அடையாளத்தோடு சேர்ந்த ஒரு விஷயம். சட்டம் - ஒழுங்கு சேர்ந்து வரலாம். அதை தடை செய்யக் கூடாது என்பது என் கருத்து என்று தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன்: தனது டுவிட்டர் பக்கத்தில் ”ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு. அதை மீட்க விரும்பும் பல கோடி பேரில் ஒரு தமிழனாய் நானும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
தனுஷ்: தமிழ் பண்பாட்டின் முக்கிய அம்சமான ஜல்லிக்கட்டை தான் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
விவேக்: தனது டுவிட்டர் பக்கத்தில் ”நாட்டு மாட்டுக்காக குரல் கொடுக்காதவன் வீரன் அல்ல. விவசாயிக்காக குரல் கொடுக்காதவன் தமிழன் அல்ல. மரத்தை மறந்தவன் மனிதனே அல்ல. இந்த வருடம் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன். பயிர் கருகுவது பார்த்து விவசாயிகள் விடும் கண்ணீர் இதயம் பிளக்கிறது. ஆனாலும் மஞ்சள், கரும்பு, பானை வாங்கி விவசாயிகள் வாழ்வில் வளம் சேர்ப்பேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
கருணாஸ்: தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டி.ராஜேந்தர்: இந்த ஆண்டு தமிழகத்தில் தடையை உடைத்து ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என உறுதியுடன் கூறினார்.