எதிர்வரும் தேர்தல்களில் டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு நிரந்தமரமாக குக்கர் சின்னம் அளிப்பது குறித்து தேர்தல் ஆணையம் நாளைக்குள் பதில் அளிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்வரும்  தேர்தல்களில் போட்டியிட  நிரந்தரமாக குக்கர் சின்னத்தை தனது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யும்படி டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடிப்படையாக கொண்டு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உட்பட எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் தனக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.



கடந்த ஜனவரி 7-ஆம் நாள் இந்த மனு மீதான விசாரணை நடைப்பெற்றது., விசாரணையின் போது டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “அதிமுகவிற்கு சொந்தமான இரட்டை இலை சின்னத்தை நாங்கள் கேட்கவில்லை. மேலும் சம்பந்தமே இல்லாத ஒரு சின்னத்தை எங்கள் தரப்பு தேர்தலில் போட்டியிட கேட்டாலும் இபிஎஸ், ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்’’ என வாதிட்டார்.


இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு வாதத்தில், "தமிழகத்தில் தற்போது உடனடியாக எந்த ஒரு தேர்தலும் நடைபெறவில்லை, நடைபெற வாய்ப்புகளும் இல்லை, அதனால், குக்கர் சின்னத்தை டிடிவி தினகரனுக்கு ஒதுக்கீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிடக் கூடாது" என வாதிட்டது.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கை ஜனவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தது. இதையடுத்து, இன்று இந்த மனுவின் மீதான விசாரணை மீண்டும் நீதிமன்றம் வந்தது. அப்போது நீதிபதிகள், டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்குவதில் சிக்கல்கள் உள்ளதா? என்பது குறித்து ஆராய்ந்து நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.