ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில் இருந்து தூத்துக்குடி சிப்காட்டுக்கு டேங்கர் லாரி ஒன்றில் கலப்பட டீசல் கொண்டு வரப்படுவதாக, மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அறிந்து கொண்ட மதுரை மண்டல குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், அந்த டேங்கர் லாரி மற்றும் தொடர்புடைய நபர்களை பிடிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் தலைமையிலான குழுவினர், தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் உள்ள சிப்காட்டில் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தை திடீரென ஆய்வு செய்தனர். 


அப்போது, டேங்கர் லாரியில் இருந்த கலப்பட டீசலை மற்ற இரண்டு சரக்கு வாகனங்களுக்கு பரிமாற்றம் செய்து கொண்டிருந்துள்ளனர். அவர்களை சுற்றிவளைத்த காவல்துறையினர், இது தொடர்பாக  கலப்பட டீசல், பேரல்களில் பரிமாற்றம் செய்யப்படும்போது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் லட்சுமணன் (32), தூத்துக்குடியை சேர்ந்த ராமர்(30), பாலமுருகன்(20), பாலாஜி என்ற பாலா(21), அருள்ராஜ் என்ற தனுஷ் (25) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.



அவர்களிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடியைச் சேர்ந்த மணிகண்டன், ரீகன், திருநெல்வேலியைச் சேர்ந்த சாலமோன் ஆகியோர் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. கலப்பட டீசலை கப்பல்கள் மற்றும் லாரி டிரான்ஸ்போர்டுகளுக்கு அவர்கள் சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.


கைது செய்யப்பட்டவர்களிடம் தகவலைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், 3 பேரையும் கைது செய்ய முயற்சி செய்தனர். ஆனால், முன்கூட்டியே தகவல் தெரிந்து கொண்ட மூவரும் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ளனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக இருக்கும் மூவரையும் தேடி வருகின்றனர். 


தூத்துக்குடியில் கலப்பட டீசல் புழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சுமார் 28,400 லிட்டர் கலப்பட டீசலை காவல்துறையினர் பறிமுதல் செய்திருந்தனர். 


இந்த வாரம் 30 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால், காவல்துறையினர் விசாரணையை பல கோணங்களில் முடுக்கி விட்டுள்ளனர்.



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR