செந்தில் பாலாஜி கைது வழக்கு! அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு!
வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை விசாரணை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி கோரிக்கை.
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதால், இந்த வழக்கில் இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகலை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கியது. இந்நிலையில் வழக்கின் அடுத்த கட்டமாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை ஆஜர் படுத்தும்படி சிறைத்துறைக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
மேலும் படிக்க | தமிழக அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜக சார்பில் ரிட் மனு!
இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்க கூடாது என்றும் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீது முடிவெடுக்கும் வரை குற்றச்சாட்டுக்கள் பதிவையும் தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதேபோல நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக ஜனவரி 12ம் தேதி செந்தில் பாலாஜியின் மூன்றாவது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து இருந்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். இந்த வழக்கில் ஜாமீன் கோரி 3வது முறையாக செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி, இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் இருந்த உண்மை தொகைகளை திருத்தி பொய்யாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், கடந்த 2016 முதல் 2017ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் குறிப்பிட்ட வங்கி கணக்கில் திடீரென பல லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.
செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யபட்ட பென்- டிரைவில், வேலை வாய்ப்பு தொடர்பாக யார், யாரிடம் இருந்து எவ்வளவும் தொகை பெறப்பட்டது, அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்ததாகவும், வங்கி ஆவணங்ளை திருத்தியதாக கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்புடையதல்ல என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், செந்தில் பாலாஜி மனு மீது நீதிபதி எஸ். அல்லி தீர்ப்பளித்தார். ஆவணங்களை திருத்தி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பில் வைத்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, ஜாமீன் வழங்கும் வகையில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறி, செந்தில் பாலாஜியின் மூன்றாவது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | ராமர் கோயில் திறப்பு விழா நேரலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ