கருணாநிதி பேனா நினைவுச்சின்னம்... பின்வாங்குகிறதா திமுக அரசு... ஸ்டாலின் திட்டம் என்ன?
Kalaignar Karunanidhi Pen Memorial: `முத்தமிழறிஞர் கலைஞர் பேனா நினைவுச்சின்னம்` அமைப்பதில் இருந்து தமிழ்நாடு அரசு பின்வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Kalaignar Karunanidhi Pen Memorial: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெருமையை போற்றும் வகையில் 30 மீட்டர் உயரத்திலும், 8 ஆயிரத்து 551 சதுர மீட்டர் பரப்பளவிலும் இந்த பேனா நினைவுச்சின்னம் அமைக்க திட்ட முன்முடிவை தமிழ்நாடு அரசு முன்மொழிந்தது. இதில் பேனா பீடம், கடற்கரைக்கு மேலே உள்ள லேட்டிஸ் பாலம் மற்றும் கடலுக்கு மேலே நிலம் மற்றும் பாதசாரிகளுக்கான பாதை ஆகியவை அடங்கும். 7 மீட்டர் அகலம் கொண்ட இந்த பாலம் நிலத்தில் 290 மீட்டர் நீளமும், கடலுக்கு மேல் 360 மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் இந்த பேனா நினைவுச்சின்னம் அமைப்பத்தற்கு சில நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதியளித்தது. அதாவது, சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னத்திற்கு' 15 நிபந்தனைகளுடன் தமிழக அரசின் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு (CRZ) அனுமதி வழங்கியது.
இறுதி ஒப்புதலுடன், மாநில அரசு முன்மொழிவை செயல்படுத்துவதற்கான செயல்முறையைத் தொடங்கலாம் எனவும் கூறப்பட்டது. கடந்த ஜூன் 19ஆம் தேதி பொதுப்பணித்துறைக்கு அனுப்பிய கடிதத்தில், நிபுணர் மதிப்பீட்டுக் குழு மற்றும் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் CRZ அனுமதி வழங்கப்பட்டதாக மத்திய அமைச்சகம் தெரிவித்திருந்தது.
மேலும் படிக்க | கலைஞருடன் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் - மதுரையில் நெகிழ்ச்சி
நிபந்தனைகளை அமல்படுத்துவது திருப்திகரமாக இல்லை என்றால் அமைச்சகம் அனுமதியை ரத்து செய்யலாம் அல்லது திட்டத்தை இடைநிறுத்தலாம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் சுற்றுச்சூழல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் நிபந்தனைகளின் இணக்கம் பொதுப்பணித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
மறுபுறம், மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கலைஞர் பேனா நினைவுச்சின்னம் கட்டுவதை தடை செய்யக்கோரி பொதுநல மனு அளித்திருந்தார். இந்த மனுவை கடந்த வாரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்த மனுவில் பொதுநலன் இல்லை என்று கூறி நீதிமன்ற அதனை தள்ளுப்படி செய்தது.
இருப்பினும், பல்வேறு சூழலியல் சார்ந்த அமைப்புகள் இந்த பேனா நினைவுச்சின்னம் சூழலியலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. நாம் தமிழர், அதிமுக போன்ற எதிர்கட்சிகளும் இதில் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். திமுக தரப்பில், இது எதிர்கட்சிகளின் அரசியல் என்றும் நினைவுச்சின்னத்தால் சூழலியலுக்கு பாதிப்பு வராது எனவும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், 'முத்தமிழறிஞர் கலைஞர் பேனா நினைவுச்சின்னம்' அமைப்பதில் இருந்து தமிழ்நாடு அரசு பின்வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ. 80 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டிருந்த அந்த நினைவுச்சின்னம் அமைக்கும் முடிவை திரும்ப பெற முடிவெடுத்துள்ளதாக அதில் கூறப்படுகிறது.
அதாவது, பேனா நினைவுச்சின்னத்தை தனியாக கடலில் அமைக்காமல், மெரினாவில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திலேயே அதனை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதுதொடர்பாக யாரும் விளக்கம் ஏதும் அளிக்காத நிலையில், அதிகாரப்பூர்வமாகவும் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ