பிரதமர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது என்று இப்போது முடிவெடுக்க கூடாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக கடந்த டிசம்பர் 16-ஆம் நாள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி வருகை புரிந்தனர்.


கருணாநிதி சிலையை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்து கூட்டத்தில் உரையாற்றினார். பின்னர் பொதுகூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தார். இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த தோழமை கட்சிகள் பல பாராட்டு தெரிவித்துள்ளன.


எனினும் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் நட்பு பாராட்டும் பல கட்சிகள், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிய தயக்கம் காட்டி வருகின்றன.


இந்நிலையில் ஸ்டாலினின் கருத்து குறித்து திரிணமுல் காங்கிரஸ் மாநிலங்களவை கட்சித் தலைவர் டெரிக் ஓ பிரையன், தெலுங்குதேச கட்சியின் மாநிலங்களவை எம்.பி ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர், பிரதமர் பதவி குறித்து தேர்தலுக்கு பின்பே முடிவு செய்ய வாய்ப்புள்ளது, தற்போதைக்கு பிரதமர் வேட்பாளராக யாரையும் அறிவிக்க வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்தனர்.


இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்...


‘‘பிரதமர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து இப்போதைக்கு முடிவெடுப்பது பொருத்தமானது அல்ல. பிரதமர் பதவியை பொறுத்தவரை விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். தனிநபர்கள், கட்சிகள் மட்டுமே இதனை முடிவு செய்ய முடியாது. அனைத்துக்கட்சிகளும் அமர்ந்து இதனை முடிவு செய்யும். அதற்கான தருணம் வரும்போது அனைவரும் ஒன்றாக பேசி ஒத்த கருத்துடன் முடிவெடுப்போம்’’ என தெரிவித்துள்ளார்.