சென்னை: ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்த வருடத்திற்கான வடகிழக்கு பருவமழை இந்த மாதம் (அக்டோபர்) இரண்டாம் வாரத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் வடகிழக்குப் பருவ மழை வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடகிழக்கு பருவமழை குறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது, 


தென்னிந்திய பகுதிகளின் கீழடுக்கில் கிழக்குத் திசை நோக்கி காற்று வீசத் தொடங்கியுள்ளது. எனவே வடகிழக்குப் பருவ மழை வரும் அக்டோபர் 17 ஆம் தேதியையொட்டி துவங்க வாய்ப்புள்ளது. கடந்த வரும் வடகிழக்குப் பருவ மழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்தது. இந்தமுறை இயல்பாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.


தென் மேற்குப் பருவ மழை வடக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளிலிருந்து படிப்படியாக விலகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் வெப்பச் சலனத்தின் காரணமாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோபிச்செட்டிப்பாளையத்தில் 13 செமீ மழை பதிவாகியுள்ளது.


மேலும் அவர் கூறுகையில், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதவேலையில், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.