சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழக மாநிலப் பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அதிமுக தலைமையிலான எடப்பாடி அரசை கடுமையாக சாடியுள்ளார். கொரோனாவை எதிர்த்து போராடி வரும் நேரத்தில் அரசியல் வெறுப்புணர்வை அள்ளி வீசுவது தமிழக முதல்வருக்கு அழகல்ல எனக் விமர்சித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பகிர்ந்துள்ள அவர் கூறியது, "கொரோனாவை எதிர்த்து போராடும் மக்களுக்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய நேரத்தில் அரசியல் வெறுப்புணர்வை அள்ளி வீசுவது தமிழக முதல்வருக்கு அழகல்ல. மக்களை காத்திட அரசு நிர்வாகம், அரசியல் கட்சிகள், சமூக நலனில் அக்கறை உள்ளவ அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டியது முதல்வரின் கடமை.


மக்களை காக்கும் இந்த அறப்போரில் அனைவரும் இணைய வேண்டும் என்ற அப்பழுக்கற்ற நோக்கிலேயே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், முதல்வர் மறுத்துவிட்டார். 15ம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கும் காவல்துறையின் மூலம் தடைவிதிக்கப்பட்டது.


அனைத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் உணவும் தண்ணீரும் வழங்குவதைக் கூட மனிதாபிமானமற்ற தமிழக அரசு தடை விதித்தது. இதற்கெல்லாம் பெயர் என்ன என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். நோய்த்தொற்றில் கூட தாங்கள் மேற்கொள்ளும் மலிவான அரசியல் என்பதைத் தவிர வேறென்ன.


எல்லாக் காலத்திலும் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை அரசுக்கு சுட்டிக்காட்டி அரசின் குறைகளை களைந்திடப் போராடுவதே எதிர்க்கட்சிகளின் கடமை. அத்தகைய கடமை ஆற்றுவதை அரசியல் செய்வதாக முத்திரை குத்துவது அழகானதா?


கொரோனா பணக்காரர்கள் மட்டும் தாக்கும் நோய் என்ற முதல்வரின் கூற்று எந்த மருத்துவரின் ஆய்விலேயே வந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மூன்று நாட்களில் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என்பது எந்த மருத்துவக்குழுவின் கண்டுபிடிப்பு என்பதையும் அவர் விளக்கிட வேண்டும்


எனவே, இத்தகைய அரசியல் வெறுப்புணர்வை வளர்ப்பதற்கு மாறாக அனைத்து அரசியல் கட்சிகள், சமூக நலனில் அக்கறை கொண்டோர் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவதற்கு தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.