விடுபட்ட இடங்களுக்கு ஜன., 30 ஆம் தேதி மறைமுகத் தேர்தல்: EC
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு வரும் 30 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!!
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு வரும் 30 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!!
சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11 ஆம் தேதி நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், 42 ஊராட்சி ஒன்றிய தலைவர், 26 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், மற்றும் 266 ஊராட்சி மன்றங்களின் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட 294 பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர் சுப்பிரமணியன் அரசாணை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடவடிக்கையை 10.30 மணிக்கும், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடவடிக்கையை பிற்பகல் 3 மணிக்கும் தொடங்கும். மறைமுக தேர்தல் கூட்டம் தொடர்பாக 7 வேலை நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும்.
மறைமுகத் தேர்தல் குறித்து நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருந்தால், அதை முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மறைமுக தேர்தலை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி மறைமுக தேர்தல் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.