5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தொகையை திருப்பி தர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அதற்கேற்ற வகையில், சிறப்பு வகுப்புகளை நடத்தி, மாணவர்களை தயார்படுத்தி வந்தன. அதேவேளையில், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பினரும், அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்நிலையில், 5ஆவது மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு அரசாணையை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அறிவிப்பை வெளியிட்டார். இவரின் இந்த அறிவிப்பு மாணவர்களை இயல்பு நிலைக்கு மீண்டும் கொண்டுவந்துள்ளது. இதை தொடர்ந்து, தற்போது 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தொகையை திருப்பி தர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். 


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்... "5 மற்றும் 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு ஆசிரியர்கள் திருப்பி அளிப்பதுதான் அவர்களது கடமை. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து தற்போது வரைபடம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விபரம் வரவில்லை. வந்தால் தான் அது குறித்து ஆய்வு செய்யமுடியும்.


5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது எதிர் கட்சிகள் போராட்டம் நடத்தியதற்கு கிடைத்த வெற்றி என்பதெல்லாம் தவறான செய்தி. மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தருமளவிற்கு மீண்டும் பயிற்சி அளித்து பரிசீலனை செய்யலாம் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது" என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.