தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அழிக்க துடிக்கும் பீட்டா போன்ற அமைப்புகளை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும். ஜல்லிகட்டு என்பது தமிழர்களின் வீரம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு சார்ந்தது மட்டுமல்லாது அறிவியல் சார்ந்ததும் கூட என்று ஜல்லிகட்டிற்கான ஆதரவுகளை அளித்து வருகின்றனர். மேலும் இந்த போராட்டத்தில் அரசியல், சினிமா சாயம் இருக்கக் கூடாது என்பது இளைஞர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.


இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று ஒருநாள் மீன் பிடிக்க செல்லாமல வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர். இதனால் ராமேசுவரம் கடற்கரையில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலை சார்ந்தவர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடியது.