ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது பற்றி வரும் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லாவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஃபரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார் என்பது குறித்து வரும் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதை தொடர்ந்து, ஃபரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என  ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 


இது குறித்த வைகோ மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது; மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா மாநாடு சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. மனுதாரர் (வைகோ) பல ஆண்டுகளாக சென்னையில் இந்த மாநாட்டை நடத்தி வருகிறார். தற்போது நடைபெற உள்ள மாநாட்டில் பல்வேறு அரசியல் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஃபரூக் அப்துல்லா அழைக்கப்பட்டிருந்தார். அவரும் பங்கேற்பதாக சம்மதித்திருந்தார். இதற்கு முன்னர் நடைபெற்ற மாநாட்டிலும் அவர் பங்கேற்றிருந்தார்.


ஆனால், ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஃபரூக் அப்துல்லா, ஸ்ரீநகரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். அவரை தொடர்பு கொள்ள மனுதாரர் முயற்சி செய்தார். எனினும், அது முடியவில்லை. இதையடுத்து, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஃபரூக் அப்துல்லாவை சென்னை வர அனுமதிக்குமாறு ஆகஸ்ட் 29 ஆம் தேதி உரிய துறையின் அதிகாரிகளுக்கு மனுதாரர் கடிதம் எழுதினார். எனினும், அவர் எழுதிய கடிதத்துக்கு உரிய பதிலை அளிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். இது சட்டவிரோதமாகும்.


இதையடுத்து, அரசமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவின்கீழ் இந்த மனுவை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். அதன்படி, ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.