செம்மொழியான தமிழ் மொழியை புறக்கணிக்கிறதா சுப்ரீம் கோர்ட்?
தமிழகத்தில் இருந்து தான் அதிக வழக்குகள் உச்ச மன்றத்துக்கு செல்கிறது. ஆனால் வழக்கை மொழிமாற்றம் செய்யும் விவகாரத்தில் தமிழ் மொழி இல்லை என்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி: தமிழகத்தில் இருந்து தான் அதிக வழக்குகள் உச்ச மன்றத்துக்கு செல்கிறது. ஆனால் வழக்கை மொழிமாற்றம் செய்யும் விவகாரத்தில் தமிழ் மொழி இல்லை என்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் ஆங்கில மொழியில் மட்டும் அல்லாமல் இந்தி, அஸாமீஸ், கன்னடம், ஒடியா, தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தீர்ப்புகள் பதிவேற்றப்பட உள்ளது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஒரு பக்கம் மகிழ்ச்சி தந்தாலும், மறுபுறம் செம்மொழி என அந்தஸ்து பெற்றுள்ள தமிழ் மொழியை, தீர்ப்பை மொழிமாற்றம் செய்யப்படும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் புறக்கணிக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.
தென்மாநிலங்களை பொருத்த வரை கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தீர்ப்புகள் பதிவேற்றப்பட உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில் இருந்து தான் அதிக வழக்குகள் உச்ச மன்றத்துக்கு செல்கிறது. ஆனால் வழக்கை மொழிமாற்றம் செய்யும் விவகாரத்தில் தமிழ் மொழி இல்லை என்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், சுப்ரீம்கோர்ட் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் ஆங்கில மொழியில் தான் இணையதளத்தில் பதிவேற்றப்படுவது வழக்கம். இனி ஆங்கிலத்தோடு, இந்தி, அஸாமீஸ், கன்னடம், ஒடியா, தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தீர்ப்புகள் பதிவேற்றப்பட உள்ளது. அடுத்த ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகளில் தீர்ப்பு விபரங்கள் வெளியிடும் பணி துவங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதன்மூலம் உலகிலேயே தீர்ப்பு விவரங்களை ஆறு மொழிகளிலும் வெளியிடும் முதல் நாடு இந்தியா என்ற பெருமை கிடைக்கும். மேலும் பல பிராந்திய மொழிகளிலும் தீர்ப்புக்களை வெளியிடும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.