சுவாதி கொலை: நான் மட்டுமே கொலை செய்தேன் ராம்குமார் வாக்குமூலம் என போலீஸார் கூறினர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி ஐடி பெண் ஊழியர் சுவாதி(24) வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம் குமார்(24) கைது செய்யப்பட்டார்.
ராம்குமாரிடம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த எழும்பூர் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. நேற்று மாலையுடன் காவல் விசாரணை முடிந்ததை தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்துக்கு ராம்குமாரை போலீஸார் அழைத்து வந்தனர். நீதிபதி கோபிநாத் முன்பு அவரை ஆஜர்படுத்தினர். அப்போது போலீஸ் காவலில் ராம்குமார் அளித்த வாக்குமூலத்தை நீதிபதியிடம் போலீஸார் சமர்ப்பித்தனர். வாக்குமூலத்தை போலீஸார் வீடியோ எடுத்திருந்ததால் அதன் சிடியையும் சமர்ப்பித்தனர்.
பின்னர் ராம்குமாரிடம் நீதிபதி கோபிநாத் தனியாக விசாரணை நடத்தினார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையில் ராம்குமார் அடைக்கப்பட்டார். ராம்குமாரை வருகிற 18-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க ஏற்கெனவே நீதிபதி உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
“எனது காதலை நிராகரித்ததாலும், என்னையும் எனது குடும்பத்தையும் சுவாதி தவறாக பேசியதாலும் தான் அவரை வெட்டினேன். நான் மட்டுமே தனியாக முடிவு செய்து இந்த கொலையை செய்தேன். இந்த கொலைக்கும் வேறு யாருக்கும் தொடர்பில்லை” என்று ராம்குமார் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.