சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி ஐடி பெண் ஊழியர் சுவாதி(24) வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம் குமார்(24) கைது செய்யப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராம்குமாரிடம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த எழும்பூர் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. பின்னர் சுவாதி கொலை வழக்கு பற்றிய விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். புழல் சிறையில் அடையாள அணி வகுப்புகள் நடத்தப்பட்டது. சுவாதி கொலை தொடர்பாக ராம்குமாரிடம் விரிவாக வாக்குமூலம் பெறப்பட்டது. 


தற்போது தேவையான ஆதாரங்கள், சாட்சியங்கள் ஆகியவற்றை சேகரித்திருக்கும் போலீசார், இந்த மாத இறுதிக்குள் குற்றப்பத் திரிகையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் ராம்குமாரின் குடும்பத்தினர், அவர் குற்றவாளி இல்லை என்று வாதிட்டு வருகிறார்கள். இது தொடர்பான ஆதாரங்களை திரட்டி ராம்குமார் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்போம் என அவரது வக்கீல்களும் கூறி வருகிறார்கள். இதனால் சுவாதி கொலை செய்யப்பட்டு ஒரு மாதத்தை நெருங்கும் நிலையிலும் பரபரப்பு அடங்காமலேயே உள்ளது.


கடந்த முறை ராம்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பத்திரமாக அழைத்து செல்வதற்கு போலீசார் பெரிதும் சிரமப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு புழல் சிறையில் இருக்கும் ராம்குமாரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தி அவரது காவலை நீட்டிக்க எழும்பூர் நீதிபதி திட்டமிட்டார். அதன்படி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ராம்குமாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அதன் பின்னர் அவரது நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.