தமிழ் சினிமாவை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.,


ஏறத்தாழ ஆயிரம் திரையரங்குகள் கொண்ட தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் முந்நூறுக்கும் மேற்பட்டத் திரைப்படங்கள் வெளியானாலும் முன்னணி நடிகர்கள் நடித்தப் படங்களை மட்டுமே கருத்தில் கொண்டே திரையரங்குகள் செயல்படுகின்றன.


மேலும், பண்டிகைக் காலங்களில் சிறு திரைப்படங்களைத் திரையிட முடியாத சூழல்தான் நிலவுகிறது. அப்படங்களுக்குக் கூட்டம் அதிகம் வராத ஒரே ஒரு பகல் காட்சி மட்டுமே திரையிட வாய்ப்பு கிடைப்பதால் அந்த திரைப்படம் நன்றாக இருப்பதை அறிந்து மக்கள் திரையரங்கை நோக்கி வரும்போது அத்திரைப்படங்கள் திரையரங்குகளைவிட்டே நீக்கப்பட்டு விடுகின்றன.


இதனாலேயே, சிறு, குறு தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்கள் ஆண்டுக்கு நூறு படங்கள் என்ற வீதத்தில் வெளிவராது முடங்கிக்கிடக்கின்றன. இவ்வாறு முடங்கித் திரையரங்குக்கு வராமலிருக்கும் படங்களின் எண்ணிக்கை மட்டும் 1500-ஐ தாண்டும். இதனால், திரைத்துறைக்கு ஏற்பட்ட இழப்பு 2,500 கோடிக்கு மேலிருக்கும் என்று சொல்லப்படுகிறது.


முன்னணி நடிகர் நடிக்கும் படங்களுக்கு 400 திரையரங்குகளை ஒதுக்கலாம்; மற்ற நடிகர்களின் படங்களுக்கு மீதமுள்ள திரையரங்குகளை ஒதுக்கலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியும் அவை செயலாக்கம் பெறவில்லை என்பது அத்துறையில் நிலவும் நிர்வாகச்சீர்கேட்டின் அவலத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது.


200 முதல் 250 பேர் வரை அமரும் சிறிய திரையரங்குகள் மாநகராட்சிகளில் அமைக்கப்படும் என்று ஒரு அறிவிப்பை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டும் அது இன்னும் அமலுக்கு வந்தபாடில்லை. அது செயலாக்கம் பெற்றால் திரையரங்க ஒதுக்கீட்டுச் சிக்கல் ஓரளவு தீர வாய்ப்புண்டு.


ஆகவே, திரைத்துறையை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த முறைகேடாக திரைப் படங்களில் இணைய தளங்களிலும், இன்ன பிற தளங்களிலும் வெளியாவது தடுக்கப்பட வேண்டும் எனவும், திரையரங்க வாகன நிறுத்தம், திண்பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க திரைப்பட ஒழுங்குமுறை ஆணையமும், திரைப்படங்களுக்கு முறையாகத் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுவதைக் கண்காணிக்க சிறப்புக் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட வேண்டும்.


இவ்வாறு தெரிவித்துள்ளார்.