தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்., 20 வரை நடைபெறும்!
தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் மற்றும் பதிலுரை வரும் திங்கட்கிழமை முதல் 4 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்!
தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் மற்றும் பதிலுரை வரும் திங்கட்கிழமை முதல் 4 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்!
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை துணை முதலவர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
அவற்றில், தமிழ் வளர்ச்சித்துறைக்கு 74 கோடியே 8 லட்சம் ரூபாயும், போக்குவரத்து துறைக்கு 2 ஆயிரத்து 716 கோடியும், நெடுஞ்சாலைத்துறைக்கு 15 ஆயிரத்து 850 கோடியும், தமிழக காவல்துறைக்கு 8 ஆயிரத்து 876 கோடியும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 405.68 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பின்னர், சட்டப்பேரவை நடவடிக்கைகளை முடிவு செய்வது தொடர்பான அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை தினங்கள் முடிந்து வரும் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும், வருகிற 20ஆம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதிலுரையாற்றுவார் என்றும் தெரிவித்தார்.
11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்பான கேள்விக்கு அது குறித்து உச்சநீதிமன்றமே விளக்கம் அளித்துவிட்டதாக சபாநாயகர் தனபால் கூறினார்.