அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு - அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்...
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் பொருளாதார நிலை வாழ்க்கைத் தரம், பலரும் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று தயார் படுத்திக் கொள்ள இயலாத நிலை உள்ளிட்டவற்றைக் கவனத்தில் கொண்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில், சுகாதாரத்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர், சட்டத்துறை செயலாளர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
இந்த குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதுடன், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், உள்ளிட்டோரிடம் கருத்துகளைப் பெற்றது. இதன்பிறகு, கடந்த 9 ஆம் தேதி நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு தனது அறிக்கையை சமர்பித்தது.
அதில், அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரி செல்வது மிக குறைவு என்பது குறிப்பிடப்பட்டது. அரசு பள்ளிகளில் 83 சதவீதம் மாணவர்கள் தினக் கூலி தொழிலாளர்களின் குழந்தைகளாக இருக்கிறார்கள் என்றும், எனவே பொருளாதார நிலை, வாழ்க்கைத் தரத்தை கருத்தில் கொண்டு, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, நீதியரசர் பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க முடிவாக பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு வந்த பிறகு அதிகபட்சம் 6 மாணவர்கள்தான் அரசு பள்ளிகளில் இருந்து மருத்துவ கல்லூரிகளுக்குள் காலடி எடுத்து வைக்க முடிந்தது. இந்த பாகுபாடு இனி முடிவுக்கு வரும்.
10 சதவீதம் வரை உள் ஒதுக்கீடுக்கு அனுமதி கொடுக்கப்பட்டால், இனிமேல், அரசு பள்ளிகளில் படித்தவர்களில், அதிகபட்சம் சுமார் 350 பேர் வரை மருத்துவ கல்லூரிகளில் சேர வாய்ப்பு ஏற்படும். எனவே, தமிழக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளன. அரசு முடிவின்மூலம், அரசு பள்ளிகள் காப்பாற்றப்படும். அரசு பள்ளிகளில் கல்வி கற்பதற்கு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் தயக்கம் தெரிவிப்பது முடிவுக்கு வரும்.