தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற நாளிலிருந்தே, ஓபிஎஸ் அணியினர் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். இதற்கு, எடப்பாடி அணியில் உள்ள சில எம்எல்ஏக்களும் மறைமுக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் எடப்பாடி அணியையும், ஓபிஎஸ் அணியையும் இணைக்கும் முயற்சி நடைபெற்றது. 


இந்நிலையில் கடந்த 23-ம் தேதி பத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது முதல்வரை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏக்கள், விரைவில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் தங்கள் தொகுதிகளுக்கு தேவையான நலத்திட்டங்கள் குறித்தும் கோரிக்கை வைத்ததாக தெரிய வந்தது.


இந்நிலையில் இன்று மாலை 3 மணியளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் நிலவும் பிரச்சனை குறித்து பேசப்படாது எனவும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் புதிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படும்.


முதல்வர் தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் சுமார் 18 பேர் கடந்த இரண்டு நாட்களில் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது, மேலும் எஸ்சிஎஸ்டி பிரிவை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள், அமைச்சரவையில் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கும் சூழ்நிலையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடப்பது முக்கியத்துவம் பெறுகிறது. அமைச்சரவை கூட்டத்தில், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் கோரிக்கைகளை குறித்தும் பரிசீலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


அதேபோன்று, தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை, வறட்சி, மணல் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் பற்றியும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும். 


மேலும், பட்ஜெட் கூட்டத்தை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டிய மானிய கோரிக்கை மசோதாவை நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவையை விரைவில் கூட்டுவது குறித்தும் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளது.