சென்னை: ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 19-ம் தேதி அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.


இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஆலோசனையின் பேரில் அப்போலோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.


முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை பற்றிய தகவல் பரவியதில் இருந்து அப்பல்லோ மருத்துவமனை முன் அதிமுக தொண்டர்கள் குவிந்து வந்தார்கள். மேலும் இன்று அதிகாலை 4 மணி அளவில் அதிமுகவினர் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


அதிகாலை 4.30 மணி ஜெயலலிதாவிற்கு இதய ரத்த நாள அடைப்பை போக்கும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. 


நேற்று மாலை ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மேலும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் செய்தி வெளியானது.


இந்நிலையில் நேடாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஜெயலலிதா மரணம் அடைந்தார். இரவு 11-30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த செய்தி நள்ளிரவு 12-15 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக் கப்பட்டது.


நேற்று இரவு 11-30 மணி அளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். திடீரென தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன.


அதே சமயம் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா வீடு உள்ள போயஸ் கார்டன் வரை ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து சற்று நேரத்தில் ஜெயலலிதா காலமானார் என்ற அறிவிப்பு வெளியானது.


அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு இருந்தனர். ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டதும், அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். துக்கத்தை தாங்க முடியாமல் அவர்கள் கதறி அழுதார்கள். போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை நோக்கியும் கூட்டம், கூட்டமாக தொண்டர்கள் வந்தனர்.


பதற்றம் ஏற்பட்டதால் மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க.வினர் சென்னையை நோக்கி வரத்தொடங்கி உள்ளனர்.


மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றது. 


ஜெயலலிதா மறைவு செய்தியை கேள்விபட்டு, அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். 


அஞ்சலி செலுத்தப்படும் ராஜாஜி அரங்கம் அருகே பொதுமக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


முன்னதாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் அவருக்கு இறுதி சடங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.