சென்னை: தமிழறிஞரும், இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமாக பணி செய்தவரும் தமிழ் கடல் என்று எல்லோராலும் போற்றப்பட்ட நெல்லை கண்ணன் அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவினால் இன்று காலமானார். இலக்கிய சமய சொற்பொழிவு ஆற்றி வந்த அவர், தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். 75 வயதை கடந்த நிலையிலும் பேச்சாற்றலும் நினைவாற்றலும் இவரது பேச்சு இலக்கிய நயமும் சிறப்பாக இருந்தது. அவருடைய மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், இலக்கிய மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நெல்லை கண்ணன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதுக்குறித்து அவர் செய்தி ஒன்றையும் வெளியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி:


பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான 'தமிழ்க்கடல்" நெல்லை கண்ணன் அவர்கள் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய காமராசர் கதிர் விருது பெற்ற பெரியவர் நெல்லை கண்ணன் அவர்கள், விழா மேடையிலேயே என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டிப் பேசியதை இப்போதும் நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன். 


‘தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் வகையில் 2021-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலக்கிய அறிவில் செறிந்த பழகுதற்கினிய நெல்லை கண்ணன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும். தமிழுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


பெருந்தலைவர் காமராசர், கண்னதாசன் உள்ளிட்ட ஆளுமைகளுடன் நெருங்கி பழகியவர். 1970 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் பிரபல பேச்சாளராக விளங்கியவர் நெல்லை கண்ணன். இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். பல்வேறு மேடைகளில் இவரது தமிழ் கொடி கட்டி பறந்தது. தொடர்ந்து மூன்று மணி நேரம் இடைவிடாது பேசும் ஆற்றல் மிக்கவர். தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதை சமீபத்தில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: காலமானார் ’தமிழ்கடல்’ நெல்லை கண்ணன்



நெல்லை கண்ணன் மனைவி மாலதி தமிழக அரசுக்கு கோரிக்கை:


நெல்லை கண்ணன் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்க வேண்டுமென அவருடைய மனைவி மாலதி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அவரின் கோரிக்கையை தமிழக ஏற்குமா? என்பது வரும் நாட்களில் தெரியும். 


ஜி.கே.வாசன் இரங்கல்:


நெல்லைக் கண்ணன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தம் சிறந்த அடைந்தேன். அவர் பேச்சாளராகவும் , பட்டிமன்ற தலைவராகவும் , இலக்கியவாதியாகவும் திகழ்ந்தவர். நெல்லை கண்ணன் அவர்கள் தன் சிறுவயது முதல் பெருந்தலைவர் காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் . சிறந்த தேசியவாதி. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.


எம் எச் ஜவாஹிருல்லா இரங்கல்:


இஸ்லாமிய சமூகத்தின் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர். சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேசுவதில் மிகப்பெரிய அளவில் முனைப்பு காட்டியவர். ஒன்றிய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு மேடைகளில் முழங்கியவர். நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பேசியதற்காக தனது முதுமை வயதிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.  தனிப்பட்ட முறையில் என்னிடம் மிகவும் அன்பாக பழகக்கூடிய மாண்பாளர். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடிதான் - ராஜன் செல்லப்பா அதிரடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ