இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. கடந்த ஜூன் 2024 அன்று சுங்கச்சாவடி கட்டணங்கள் 5 முதல் 7 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. நீண்ட நெடுங்காலமாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளை பொறுத்தவரை, தனியார் பங்களிப்பில் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு அதற்குரிய தொகையை வசூல் செய்வதற்குத் தான் சுங்கக் கட்டண வசூல் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், செங்கல்பட்டு அருகில் உள்ள பரனூர் சுங்கச்சாவடி 2005 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தொடங்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 19 ஆண்டுகளாக சுங்கக் கட்டணம் வசூலிப்பது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. இந்த வசூலின் மூலம் இதுவரை மொத்தம் கிடைத்த தொகை எவ்வளவு என்கிற விவரத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் பல சுங்கச்சாவடிகள் காலாவதியாகி விட்ட நிலையில், சுங்கச்சாவடிகளில் வழக்கமான கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் காலாவதியாகியும்  கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் பரனூர், கிருஷ்ணகிரி, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை போன்ற சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி, ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு சார்பில் கடிதம் எழுதியிருப்பதாக தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு அவர்கள் கூறியிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 


மேலும் படிக்க | பாஜக எச் ராஜா மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - காங்கிரஸ் தரப்பில் புகார்!


காலாவதியான சுங்கச்சாவடிகளில் தனியார் வசூலிக்கிற தொகை யாருக்கு செல்கிறது ? அதில் பயனடைபவர்கள் யார் என்று தெரியவில்லை?. மதுரைக்கு அருகில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது 2012 இல் தொடங்கப்பட்டது. சமீபத்தில் ஜூலை 2024 அன்று உள்ளுர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தில் 50 சதவிகிதம் செலுத்த வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மதுரையை சுற்றியுள்ள திருமங்கலம் போன்ற பகுதியிலுள்ள உள்ளுர் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். அதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுங்கச்சாவடி சேதப்படுத்தப்பட்டதை அனைவரும் அறிவார்கள். இதைப்போல, அந்தந்த பகுதிகளில் கடும் பாதிப்புகளினால் பயணிகள் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். 


தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகளின் மூலம் வசூல் கொள்ளை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் மூன்று புதிய சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் விழுப்புரத்திற்கு அருகில் உள்ள நங்கிலிகொண்டான் சுங்கச்சாவடியில் வாகனம் ஒருமுறை செல்வதற்கு ரூபாய் 60 முதல் 400 வரை வசூலிக்கப்படுகிறது. அதே நாளில் திரும்புவதற்கு ரூபாய் 95 முதல் 600 வரை வசூலிக்கப்படுகிறது.  இந்தக் கட்டணம் கடுமையானது மட்டுமல்ல, பயணிகளை வஞ்சிக்கிற செயலாகும். இந்த சுங்கச்சாவடி கட்டணங்கள் எதற்காக வசூலிக்கப்படுகிறது ? அடிப்படை காரணம் என்ன ? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கட்டணம் வசூல் நீடிக்கும் என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 


கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் அவர்கள் வசூலிக்க வேண்டிய தொகையின் இலக்கு முடிந்தும் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு அதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கு பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை கூற விரும்புகிறேன். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் தான் விளக்க வேண்டும். கடந்த 2023 டிசம்பரில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையில், ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையின் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில் ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது என பகிரங்கமாக கூறப்பட்டிருந்தது. மேலும், நாட்டிலுள்ள ஆயிரம் சுங்கச்சாவடிகளில் 5 சுங்கச் சாவடிகளை சி.ஏ.ஜி. ஆய்வு செய்தது. அதில் சட்ட விதிகளுக்கு புறம்பாக ரூபாய் 132 கோடி வசூல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் குறித்தும் சி.ஏ.ஜி. அறிக்கையின் அடிப்படையில் மோடி அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?. 


தன்னை புனிதமானவர் என்று தம்பட்டம் அடித்து கொள்கிற மோடி சி.ஏ.ஜி. அறிக்கைக்கு என்ன பதில் கூறப்போகிறார் ? கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி ஒதுக்கீடு குறித்து சி.ஏ.ஜி. கூறிய முறைகேடுகளுக்கு விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை எவரும் மறந்திட இயலாது. அதைப்போல உரிய விசாரணை நடத்த மோடி அரசு தயங்குவது ஏன் ? மடியில் கனம் இருப்பதால் மோடி அரசு விசாரணைக்கு தயங்குகிறதா?.


தமிழக நெடுஞ்சாலைகளில் பயணிக்கிற வாகன ஓட்டுநர்களை, சுங்கச்சாவடி கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளையடிக்கிற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தீவிரமான ஒரு போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் நடத்த விரும்புகிறது. அதன்படி, தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 70 சுங்கச்சாவடிகளிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் விரைவில் முற்றுகை போராட்டங்களை நடத்தி கண்டனத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார். 


மேலும் படிக்க | TN School Holidays | காலாண்டு விடுமுறை! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடுத்த முக்கிய அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ