சென்னை: நேற்று காலை முதல் சினிமா பைனான்சியர் அன்புசெழியன், பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். விடிய விடிய நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த சோதனையில் இதுவரை ரூ. 300 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், காசோலை, கடன் பத்திரங்கள் உட்பட பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருமான வரித்துறையினரின் சோதனை இன்னும் நடிகர், தயாரிப்பாளர், கடன் அளித்தவர்கள், பைனான்சியர்கள், விநியோகஸ்தர்கள் என நீண்டுக்கொண்டு செல்கிறது. இன்னும் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாக உள்ளது. ஒருபுறம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம், மறுபுறத்தில் இது மத்திய அரசின் பழிவாங்கும் செயல் என பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று முதல் ட்விட்டரில் ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து டிரேண்டிங் செய்து வருகின்றனர்.


அதேநேரத்தில் சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அவரின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. மேலும் நேற்று இரவு முதல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் விஜய்யிடம் தொடர்ந்து அதிகாரிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


இந்த சம்பவம் குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்ட போது, வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனைக்கும் தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.


சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாநில கல்லூரியின் 180-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். 


பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகம் முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனைக்கும் தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே வருமானவரித்துயினர் சோதனை நடத்தப்படுவதாகவும்,  விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கும், அரசுக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.