தொடரும் கனமழை; ராமேஸ்வரத்தை சூழ்ந்த நீர்; மீட்பு பணி தீவிரம்
தமிழகத்தின் ராமேஸ்வரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதனால் குமரி கடல் பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளியுடன் கூடிய காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ராமேஸ்வரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலை முழுவதும் நீர் நிரம்பி இருப்பதால், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. நீர் தேங்கி உள்ள பகுதிகளில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.