சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ரூ.24 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, பெரியாம்பட்டி - துட்டம்பட்டி வரை 3 கிமீ நீளமுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். சுமார், ரூ.24 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையும், ரூ.5.25 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இரு பாலங்களையும், தொளசம்பட்டி சாலை, கொங்கணாபுரம் வடகரை  வாய்க்கால் கரிமேடு சாலையில் பாலங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 


இதையடுத்து பொதுமக்களிடம் பேசிய அவர்; சாலை வசதி சிறப்பாக இருந்தால்தான் தொழில்துறை வளர்ச்சி அடையும் என்றார். சாலை உள்கட்டமைப்பு என்பது மிக முக்கியமானது. எந்த மாநிலத்தில் சாலை உள்கட்டமைப்பு சிறப்பாக உள்ளதோ அங்கு தொழில்வளம் பெருகும். உட்கட்டமைப்புகள் சிறந்ததாக இருந்தால்தான் அனைத்து வசதிகளையும் நாம் பெற  முடியும் என்றார்.


கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது என்றும் ரூ.2000 கோடியில் சென்னைக்கு அருகே உணவுப்பூங்கா அமைக்கப்படவுள்ளது என்றார். மேலும், தொழில்வளம் பெருகுவதற்கும் அரசு நடவடிக்கைகள் எடுத்து  வருகிறது. குடிமராமத்து பணிகள் விவசாயிகள் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறுகிறது. விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக அதிமுக அரசு செயல்படுகிறது என்றார்.  


சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட உதிரிபாக உற்பத்தி  ஆலை அமைக்கப்படும் என்றும் பூ விவசாயிகள் தமிழகத்திலேயே உரிய விலையில் பூக்களை விற்பனை செய்யலாம், விவசாயிகள் பூக்களை ஒரு மாதம் வரை குளிர்பதன கிடங்கில் இலவசமாக தேக்கி வைக்கலாம் என்றார்.