தமிழகத்தில் நாளை ஊரக உள்ளாட்சி முதல் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
நாளை தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சுமார் 63 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னை: தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு இரு கட்டங்களாக வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தவகையில், நாளை முதல் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்காக பலத்த பாதுக்காப்பு அந்தந்த மாவட்டங்களில் போடப்பட்டு உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சுமார் 63 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
முதல் கட்ட தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
நாளை நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
ஊராட்சி தேர்தலுக்காக 702 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 13 ஆயிரத்து 62 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் சுமார் 4 லட்சத்து 2 ஆயிரத்து 195 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
27 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் விவரம்:
1) தமிழக தேர்தல் ஆணையம் 2019 உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பு அறிவிப்பை 2019 டிசம்பர் 6 ஆம் தேதி வெளியிடும்.
2) தமிழக ஊரக அமைப்பு தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13, 2019 அன்று முடிவடைந்தது.
3) வேட்புமனுக்கள் டிசம்பர் 16, 2019 அன்று பரிசீலிக்கப்பட்டது.
4) வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 2019 டிசம்பர் 18
5) வாக்கு எண்ணிக்கை 2020 ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.