சென்னை: டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் என மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து சபாநாயகர் தனபால், அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பில் அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் மற்றும் நாகப்பட்டினம் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி ஆகியோருக்கு வேற கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.


இந்தநிலையில், இன்று டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி மூன்று எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்க வேண்டும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. 


2019 மக்களவையின் இரண்டாம் கட்டத்தேர்தல் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. அதில் தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. மேலும் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற விருக்கின்றன. அதாவது மொத்தம் 22 சட்டசபை தொகுதி என ஒரு மினி சட்டசபை தேர்தலை தமிழகம் எதிர்கொண்டு உள்ளது. தேர்தலுக்கான முடிவுகள் அடுத்த மாதம் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. 


ஒருவேளை தேர்தல் முடிவில் அதிமுகவுக்கு சாதகமான சூழ்நிலை வரவில்லை என்றால், ஆட்சிக்கு சிக்கல் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. தமிழக சட்டபேரவையில் பெரும்பான்மையை நிருப்பிக்க முடியாத சூழல் உருவாகும்.


தற்போது தமிழக சட்டசபையில் அதிமுகவின் பலம் 114 எம்எல்ஏக்களாக உள்ளது. 22 சட்டசபை இடைத்தேர்தலில் குறைந்தது 4 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியே ஆக வேண்டும். இல்லையென்றால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்ப்படும். தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க 118 எம்எல்ஏக்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.


ஒருவேளை தேர்தல் முடிவுக்கு பின்னர் தமிழக சட்டசபையில் அதிமுக பெரும்பான்மையை நிருப்பிக்க முயன்றால், அந்த சமயத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தங்களுக்கு ஆதரவு அளிக்காவிட்டால், ஆட்சி கவிழும் அபாயம் ஏற்ப்படும். ஒருவேளை தகுதி நீக்கம் செய்தால் சட்டசபையின் இடங்கள் 231 ஆக குறையும். எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக இருந்தால் பெரும்பான்மை காட்டி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம். அதேபோல இடைத்தேர்தலில் குறைந்தது 8 முதல் 10 இடங்களை அதிமுக வெற்றி பெற்றால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் வராது என்பதும் குறிப்பிடத்தக்கது.