பெரியார் திடலில் விஜய்... கட்சி தொடங்கிய பின் இதுவே முதல்முறை... திராவிட இயக்க வழியில் தவெக?
TVK Vijay: தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று மரியாதை செய்தார்.
Tamilaga Vetri Kazhagam, Actor Vijay: தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று மரியாதை செய்தார். அப்போது அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் இருந்தார்.
பெரியார் பிறந்தநாள் பதிவு
முன்னதாக, இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி விஜய் அவரது X தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,"சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்; சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்" என தந்தை பெரியாரை நினைவுக்கூர்ந்திருந்தார்.
விஜய் கட்சித் தொடங்கியதில் இருந்தே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கோட்பாட்டை அனைத்து தளங்களிலும் கூறி வருகிறார். அவர் தனது கட்சியின் பெயரில் 'திராவிடம்' என்ற சொல்லை தவிர்த்ததன் மூலம் அவர் திராவிட சித்தாந்தத்தை விட்டு விலகி செல்ல நினைக்கிறாரா என பலரும் கேள்வியெழுப்பியிருந்த நிலையில், விஜய்யின் இன்றைய பதிவும், பெரியார் திடலுக்கு நேரடியாக வந்து மரியாதை செலுத்தியதும் அவர்களின் கருத்தை முற்றிலும் தவிடுபொடியாக்கி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | பவள விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திராவிட இயக்க வழியில் தவெக?
கடந்த பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கியதாக அறிவித்த பின்னர் விஜய், பொது இடத்தில் ஒரு தலைவர் சிலைக்கு மரியாதை செலுத்துவது இதுவே முதல்முறையாகும். பல மேடைகளில் பெரியாரை படிப்பது அவசியம் என விஜய் பேசியிருந்தாலும் கூட அவரின் இன்றைய செயல்பாடு பல கேள்விகளுக்கும், சந்தேகங்களும் பதிலளித்திருப்பதாகவே தெரிகிறது. அதிலும் நீட் தேர்வு விலக்கு குறித்து விஜய் ஒருமுறை பேசியதும் அரசியல் ரீதியில் கவனம் பெற்றது இங்கு நினைவுக்கூரத்தக்கது. எனவே, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சமத்துவம், சமூக நீதி, திராவிட ஓர்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விஜய் புரிந்துகொண்டிருக்கிறார் என்பதும் இதில் உறுதியாகிறது.
தவெக மாநாடு எப்போது?
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் செப். 23ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில், சில காரணங்களுக்காக அந்த மாநாடு தள்ளிவைக்கப்படலாம் என தெரிகிறது. அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், மாநாடு தேதி குறித்த அறிவிப்பை விஜய் இன்று அறிவிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டமிடல்கள் குறித்து விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | விஜய் மாநாட்டில் மீனவர்கள் தொடர்பாக தீர்மானம்? புஸ்ஸி ஆனந்த் சொன்ன தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ