டிட்கோ தொழிற்பூங்கா... விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி - அண்ணாமலை
டிட்கோ தொழிற்பூங்கா தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையில் செய்திருக்கும் திருத்தம் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் டிட்கோ தொழிற்பூங்கா அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், கோவை மாவட்டம் அன்னூரில் தொழிற்பூங்கா அமைப்பதற்கு தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும் எனவும், விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமழ்நாடு அரசின் அறிவிப்பை வரவேற்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தென் தமிழ்நாட்டிற்கு நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும், அங்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். ஆனால் விவசாய நிலங்களை அழிக்காத வகையில் தொழிற்சாலைகள் வர வேண்டும். தரிசு நிலங்களை மட்டுமே தொழிற் பூங்காவுக்கு எடுப்போம் என்று அரசு கூறியுள்ளது.
அரசின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். டிட்கோ தொழிற்பூங்கா அமைப்பதற்கான அரசாணையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் விவசாயிகளுக்கே கிடைத்த வெற்றி. அண்ணாமலைக்கும், ஆ.ராசாவுக்கும் பிரச்சினை கிடையாது, அண்ணாமலைக்கும் ஊழல்வாதிகளுக்கும்தான் பிரச்னை” என்றார்.
முன்னதாக, தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் அரசு ஒரு தொழிற் பூங்காவை நிறுவ முடிவு எடுத்தது. கோவை மாவட்டத்தை பொருளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாக தொடர்ந்து தக்க வைக்கவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும், தொழிற் பூங்காவை அமைக்க 3862 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு, (அரசு ஆணை எண் 202, தொழில் மு.ஊ (ம) வர்த்தகத் (எ.ஐ.இ.1) துறை நாள் 10.10.2022) அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.
தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ராஜா, அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். அக்கோரிக்கையை கருத்தில் கொண்டும், விவசாய பெருமக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும், தற்போது விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும்.
மேலும், எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, அவர்களின் நலனிற்காக மட்டுமே செயல்படும். இத்தொழிற்பூங்காவில் அமையவிருக்கும் தொழிற்சாலைகள் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும். எனவே, டிட்கோ மூலம் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான தரிசு நிலங்களில் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க தற்போது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | டிட்கோ தொழிற்பூங்கா - தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ