சேலம் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 12 பசுமைவெளிப் பூங்காக்களை முதல்வர் பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை, தர்மநகர், முல்லைநகர், பிரகாசம் நகர் உள்ளிட்ட 12 இடங்களில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் பசுமைவெளி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் இந்த பூங்காக்களில் நடைபாதைகள், தியான மண்டபங்கள் மற்றும் மூலிகை பண்ணை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 



சேலம் அம்மாபேட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த பசுமைவெளி பூங்காக்களை திறந்து வைத்தார். பின்னர்  பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த இறகுபந்து மைதானத்தில், இறகு பந்து விளையாடினார்.


இதேபோல், சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்வதற்கு, 1,38,00,000 மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ள 55 இரண்டடுக்கு 3 சக்கர மின்கல மோட்டார் வாகனங்களையும் பயன்பாட்டுக்காக முதல்வர் வழங்கினார்.


இதனையடுத்து சேலம் நேரு கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர், மாநகர காவல் ஆணையரகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு ரோந்து குழுவிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குதல் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றினார். 


அப்போது, தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், இந்திய அளவில் தமிழகத்தில் கல்வி தரம் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.