சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, நாளை வெளியாகவுள்ள படம் ‘ஜெய்பீம்’. இந்த படத்தை பார்த்த பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த படக்குழுவினர், அவருக்கு படத்தை திரையிட்டு காட்டினர். பின்னர் முதல்வர் முன்னிலையிலேயே பழங்குடியின மக்களின் நலனுக்காக சூர்யா 1 கோடி ரூபாய் வழங்கினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெய் பீம் படத்தை பார்த்து நெகிழ்ந்து போன முதல்வர், படம் குறித்த அறிக்கையை வெளியிட்டு முதல்வரே பாராட்டிய படம் என்ற சிறப்பினை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. படம் பற்றி முதல்வர் கூறுகையில், “நேற்று நான் ‘ஜெய்பீம்‌’ திரைப்படத்தைப்‌ பார்த்தேன்‌. அதில் இடம்பெற்ற காட்சிகள் யாவும் என் மனதைக்‌ கனமாக்கி இரவு பொழுதை பகல் பொழுதுக்கி தூக்கத்தை போக்கிவிட்டன. அடிதட்டில் இருக்கும் இருளர்‌ மக்களின்‌ வாழ்க்கையை அடிப்படையாக வைத்து,நாளுக்கு நாள் அவர்கள் சந்திக்கும் இன்னல்களையும்,அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும்,ஏற்படும் துயரங்களையும் மிக துல்லியமாகவும்,கலைநயத்துடனும் எங்களைத் தவிர வேறு யாராலும் காட்சிப்படுத்த முடியாது என்பதை உணர்த்திவிட்டீர்கள். அனுபவித்து வரும்‌ துன்ப துயரங்களையும்‌ இதனைவிடத்‌ துல்லியமாக, கலைப்பூர்வமாகக்‌ காட்சிப்படுத்த இயலாது என்பதைக்‌ காட்டிவிட்டீர்கள்‌. இது மனதில்‌ பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்திவிட்டது. 



ஒருசில சமயங்களில்‌, காவல்‌துறை அதிகாரிகளில் சிலர் தவறுகளை செய்து விடுகின்றனர். இதனால் அந்தத்‌ துறைக்கே களங்கம் ஏற்பட்டு விடுகிறது. அதே வேளையில், உண்மையை வெளிக்கொணரவும், காவல்துறை மீது படிந்த கறையை போக்கும்விதமாக சில காவல்துறை அதிகாரிகளும் செயல்படுவதாக காட்சிபடுத்தி இருக்கிறீர்கள். சட்டத்யினை யும்,  நீதியினையும்‌ கொண்டு எவ்வளவு பெரிய தடைகளையும் தகர்த்தெறிய முடியும் என்பதை இப்படம் எடுத்துரைக்கிறது. ஒரு வழக்கறிஞர்‌ (சந்துரு), ஒரு காவல்‌துறை அதிகாரி (ஐஜி பெருமாள்சாமி) ஆகிய இருதரப்பும்‌ நினைத்தால்‌ சமூக ஒழுங்கீனங்களைத்‌ தடுத்து நிறுத்த முடியும்‌. அமைதியான, அதே நேரத்தில்‌, அழுத்தமான வழக்கறிஞராக நண்பர்‌ சூர்யா திறமையாக நடித்துள்ளார்‌. நடித்திருக்கிறார் என்பதைவிட, வழக்கறிஞர்‌ சந்துருவாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இக்கதையைத்‌ தேர்வு செய்ததும்‌, அதனைப்‌ படமாக எடுத்ததும்‌, அதில்‌ தானே நடித்ததுமென மூன்று பாராட்டுகளை சூர்யா பெறுகிறார்‌. 


ALSO READ சூப்பர் ஹிட் படங்களின் ரீமேக் வாய்ப்பை நிராகரித்த சிவகார்த்திகேயன்!


மேலும் கதைக்களத்தை கலைக்களமாக மாற்றிச்‌ சிறப்பாக இயக்கிய இயக்குநர்‌ த.செ. ஞானவேல்‌ மற்றும் அவரது படக்குழுவினர்‌ அனைவருக்கும்‌ எனது மனமார்ந்த பாராட்டுகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இதுபோன்ற படங்கள்‌ ஏராளமாக வரவேண்டும்‌ என்பதே எனது ஆசையும்‌ விருப்பமும்‌ ஆகும்‌. இருளர்‌ இன மக்கள் குறித்த படத்தை எடுத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டது எனக்‌ இருந்துவிடாமல், பழங்குடியின மக்களின் நலனுக்காக 1 கோடி ரூபாய்‌ நிதியினை நண்பர்‌ சூர்யா வழங்கியது என்னை நெகிழச்‌ செய்துள்ளது. இதுபோன்ற செயற்கரிய செயல்களை அனைவரும்‌ செய்ய வேண்டும்‌. ‘ஜெய்பீம்‌’ படம்‌ பார்க்க நான்‌ சென்றபோது சென்னை உயர் நீதிமன்றத்தின்‌ ஒய்வு பெற்ற நீதியரசர்‌ சந்துருவைச்‌ சந்தித்தேன்‌. (நீதியரசர்‌ என்று யாரையும்‌ சொல்லக்‌ கூடாது என்று சொல்பவர்‌ அவர்‌. ஆனாலும்‌ எங்களுக்கு அவர்‌ நீதியரசர்தான்‌] அவர்‌ என்னிடம்‌ நீதியரசர்‌ இஸ்மாயில்‌ ஆணையத்தின்‌ அறிக்கையைக்‌ கொடுத்தார். மிசா சட்டத்தின்படி நாங்கள்‌ கைது செய்யப்பட்டது குறித்த விசாரணை ஆணையத்தின்‌ அறிக்கை அது. 


காவல்‌ நிலையம்‌ ஒன்றில்‌ நடந்த இதேபோன்ற தாக்குதல்தான்‌ சென்னை மத்திய சிறையில்‌ 1976-ம்‌ ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம்‌ நாள்‌ இரவு எனக்கும்‌ நடந்தது. என்‌ மீது விழுந்த பல அடிகளைத்‌ தாங்கியவர்‌ சிட்டிபாபு. அதனால்‌ அவரது உயிரே பறிபோனது. அன்று நடந்த சித்திரவதைகளை ‘சிறை டைரி’யாக சிட்டிபாபு எழுதியுள்ளார். இந்த நினைவுகள்‌ அனைத்தும்‌ நேற்று ‘ஜெய்பீம்‌’ பார்த்துவிட்டு வெளியில்‌ வந்தபோது என்‌ மனக்கண்‌ முன்‌ நிழலாடியது. இப்படி பல்வேறு தாக்கங்களை என்னுள்‌ ஏற்படுத்தக்‌ காரணமான ‘ஜெய்பீம்‌’ படக்‌ குழுவினருக்கு எனது பாராட்டுகள்‌! நண்பர்‌ சூர்யாவுக்கு எனது வாழ்த்தும்‌ நன்றியும்‌” என்று உள்ளம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.


 



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR