அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக, அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாவது., "நடப்பு ஆண்டில், 12,524 ஊராட்சிகளில் மற்றும் 528 பேரூராட்சிகளில் 64 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் “அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்” என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.


இத்திட்டத்தின் கீழ், அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் “அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு” அமைக்கப்படும்.


ஒவ்வொரு கிராமத்திலும், கபடி, வாலிபால், கிரிக்கெட், கால்பந்து போன்ற ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு களம் அமைக்கும் பணிகள், ஊரகப் பகுதிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழும், பேரூராட்சிகளில் பேரூராட்சிகள் பொது நிதியிலிருந்தும் மேற்கொள்ளப்படும்.


இளைஞர்களுக்கு போதிய பயிற்சி அளித்து, ஊராட்சி ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையால் நடத்தப்படும். வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் பரிசுகள் வழங்கப்படும்.


ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில், ஆண்டு முழுவதும் விளையாட்டு சாதனங்கள் வழங்கவும், திறந்த வெளி உடற்பயிற்சி மையம் அமைக்கவும், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கவும் 64 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் அவற்றின் தொடர் செலவினத்திற்காக மாநிலஅரசின் நிதியிலிருந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் மேற்கொள்ளப்படும்.


அனைத்து முக்கியமான சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் சீனியர் மற்றும் ஜுனியர் பிரிவுகளில் பதக்கம் வெல்பவர்களுக்கும் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கும் உயரிய ஊக்கத் தொகை அளிக்கப்படும்.


சென்னை நேரு பூங்கா அருகில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பழைய தலைமை அலுவலகக் கட்டடத்தை இடித்து விட்டு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.


தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் 12 ஆசிரியர் குடியிருப்புகள் 3.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.


மாநில தகவல் ஆணையத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டப்பட வேண்டிய அவசியத்தைக் கருதி, இதற்கென சென்னை, சைதாப்பேட்டையில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.