ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பா இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுடள்ளதாவது., "மத்திய பா.ஜ.க அரசு இன்று நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்துள்ளதோடு, இம்மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவையும் ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை காஷ்மீர் மக்களின் மாநில உரிமையை அபகரிப்பதாகும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும்.


நாட்டின் விடுதலைக்குப் பிறகு, தனிப்பிரதேசமாக இருந்த காஷ்மீர் மாநிலம் இந்தியாவோடு இணைவது குறித்து இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு காஷ்மீர் மக்களின் தலைவர் ஷேக் அப்துல்லா ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனம் 370 உள்ளிட்ட பிரிவுகள் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தமாக நிறைவேற்றப்பட்டு அதனடிப்படையில் காஷ்மீர் மாநிலம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது. இந்த வரலாற்று உண்மையை புறக்கணித்து மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சாசனப் பிரிவு 370ன் படி வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதும், இம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது அதிகார மமதையில் நடத்தப்பட்ட ஜனநாயகப் படுகொலையாகும். மாநில அரசுகள், மாநில உரிமைகள் மீது பாஜக அரசு நடத்தி வரும் கோரத்தாண்டவத்தின் ஒரு பகுதியே காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையாகும்.


மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம், இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாப்பதில் அக்கறை கொண்ட அனைவரும் மத்திய பாஜக அரசின் இக்கொடூரமான தாக்குதலை எதிர்த்து போராடி முறியடிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.