ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் நாளை துவங்கி ஜன., 1 வரை கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க மாணவர்களிடையே போராட்டம் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் நாளை துவங்கி ஜன., 1 வரை கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விடுமுறை ஆனது ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழகத்தின் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். 


நீண்ட விடுமுறை முடிவடைந்து ஜனவரி 2-ஆம் தேதி பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் துவங்கும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு வரும் 25-ஆம் தேதி முதல் வரும் 2020 ஜனவரி 1-ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ் விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர வழக்குகளை டிச., 27-ஆம் தேதி தாக்கல் செய்யலாம் எனவும், டிசம்பர் 30-ஆம் தேதி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் எந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆனது டிசம்பர் 27 மற்றும் 30 தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. தேர்தலுக்கு முன்னதாக டிசம்பர் 25-ஆம் நாள் கிறிஸ்துமஸ் பண்டிகை, தேர்தலை தொடர்ந்து புத்தாண்டு விடுமுறை என ஜனவரி 1-ஆம் தேதி வரை தற்போது தமிழகத்தின் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், தமிழக மாணவர்கள் மீண்டும் ஒரு மெரினா புரட்சியை துவங்காமல் இருக்க வேண்டி தமிழக அரசு இந்த அதிரடி நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.