சென்னையில் புதிதாக 2 லட்சம் மழைநீர் சேமிப்புத் தொட்டிகள்?...
சென்னையில் புதிதாக 2,00,000 மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் புதிதாக 2,00,000 மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை தீவிரப்படுத்துவது மற்றும் தொட்டிகளை புனரமைப்பது குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, சென்னையில் உள்ள 200 வார்டுகளில், ஒரு வார்டுக்கு தலா 1000 மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்காக மண்டல அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுவானது வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்வதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன.
சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வளியுறுத்தி வருகின்றனர்.
எனினும் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தண்ணீர் வறட்சி ஏதும் இல்லை, எல்லாம் வதந்திதான் என தெரிவித்து வருகிறார். இதற்கிடையில் இன்று சென்னையில் புதிதாக 2,00,000 மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது, மேலும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.