பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில் பொறியியல் கலந்தாய்விற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை இதுநாள் வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில் தற்போது முதல் முறையாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கலந்தாய்வை நடத்துவதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


கலந்தாய்விற்கான விண்ணப்பங்களை www.tnea.ac.in மற்றும் www.annauniv.edu என்ற இணைய தளங்களில் மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும்,  ஜூன் 3-ஆம் தேதி ரேண்டம் எண் வழங்கப்படும் என்றும், ஜூன் 6 முதல் 11 வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேப்போல் ஜூன் 17-ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு ஜூன் 20, 21, 22 தேதிகளில் முறையே மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினருக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும். இதனைத்தொடர்ந்து ஜூலை 3 முதல் 30-ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.


கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் 42 சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அவற்றின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தல், சான்றிதழ் சரிபார்த்தல், கலந்தாய்வு உள்ளிட்ட பணிகளை மாணவ மாணவிகள் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வீடுகளில் இணைய வசதி உள்ளவர்கள் வீடுகளில் இருந்தே கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனவும், விண்ணப்ப கட்டணம் மற்றும் கலந்தாய்வு கட்டணத்தில் மாற்றம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.