கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் முதல் போக்குவரத்து பூங்காவை எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிகழ்வையொட்டி நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் சாலை விதிகளை பின்பற்றவும் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.


பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ரூட்ஸ் குழும நிறுவனங்களுடன் இணைந்து டொயோட்டா நிறுவனம் மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், போக்குவரத்து மாதிரி பூங்காவை அமைத்துள்ளது.


இந்த போக்குவரத்து பூங்காவினை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டத்துறை அமைச்சர் வேலுமணி திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ரூட்ஸ் குழும தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மேலாண்மை இயக்குனர் மஸகாசு யோஷிமுரா வரவேற்பு வழங்கினார். 


நிகழ்ச்சியில் ரூட்ஸ் குழும தலைவர் ராமசாமி பேசுகையில், ''2017-ல், 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர். ஒரு மணி நேரத்தில் சராசரி, 17 பேர் உயிரிழக்கின்றனர். இது ஒரு ஆபத்தான நிலைமை. சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும். அதற்கு, சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என குறிப்பிட்டார்.


விழாவில் கோவை மண்டல இணை போக்குவரத்து ஆய்வாளர் ஜெயசங்கரன், ஆர்.டி.ஓ., தியாகராஜன், எம்.எல்.ஏ.,க்கள் சின்னராஜ், அருண்குமார், டொயோட்டா மோட்டார் உதவி தலைவர் நவீன் சோனி உள்பட பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர்.