தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கை CBI விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனித்து வரும் நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4,800 கோடி முறைகேடு நடந்துள்ளதாக, தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கினை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி மனுவில் வலியுறுத்தி இருந்தார். இதன்படி நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப  லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கையும் தாக்கல் செய்தனர். 


இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை முதலமைச்சர் கையில் இருப்பதால் விசாரணை நியாயமாக இருக்க வாய்ப்பில்லை என மனுதாரர் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டு, கூடுதல் மனுவும் தாக்கல் செய்தார். 


இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை CBI விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில் CBI விசாரணை தொடங்கி நடத்தி வருகிறது. 


இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் CBI விசாரணையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.