தமிழகத்தை அச்சுருத்திவரும் 'கஜா' புயல் கடலூர் மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து கஜா புயலாக மாறியுள்ளது. சென்னைக்கு கிழக்கே 750 கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 840கி.மீ. தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கஜா புயல் கடலூர் மற்றும் வேதாரண்யம் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் முகப்புத்தக்க பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவரின் முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... தென்மேற்கு திசையை நோக்கி கஜா புயல் மெல்ல நகர்ந்து வருகிறது. இதே திசையில் நகர்ந்தால் 15-ஆம் தேதி கடலூர் மற்றும் வேதாரண்யம் இடையே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது. கஜா புயலால் வட உள்மாவட்டங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புயலின் திசை தென்தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் மழை வாய்ப்பை அதிகரிக்கும் என தெரிகிறது.



மேலும் கஜா புயலினால் வரும் 14-ஆம் தேதி சென்னையில் நல்ல மழை எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த வட தமிழக கடற்கரைப் பகுதிகளிலும் நவம்பர் 14-ஆம் நாள் முதல் 16-ஆம் நாள் வரை மழை பெய்யக்கூடும். கஜா புயல் சென்னையில் இருந்து வெகுதொலைவில் இருப்பதால் காற்று பலமாக வீசுவதற்கு வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் முன்பு கணித்ததை காட்டிலும் சென்னையில் நவம்பர் 14-ஆம் நாள் முதல் 16-ஆம் நாள் வரை மழை பெய்ய வாய்யுள்ளது எனவும், சென்னையில் 150 மி.மீ வரை மழை பெய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தென்தமிழகத்தை பொறுத்தவரை  உள்மாவட்டங்களிலும், மலைப்பகுதி மாவட்டங்களிலும் மற்றும் டெல்டா பகுதிகளில் மழை இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேற்கு, தென்மேற்கு திசை நோக்கி கஜா புயல் நகர்வதால் வலிமையானதாக இருக்காது, எனவே மணிக்கு 60கிமீ முதல் 80கிமீ வரையிலும், நிலத்தை அடையும்போது 90கிமீ முதல் 100கிமீ வரையிலும் காற்று வீசக்கூடும் என இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். கஜா புயல் அரபிக்கடலுக்குள் சென்றபின் வடகிழக்கு பருவமழை தூண்டப்பட்டுத் தீவிரமடையும் என்றும், உள்மாவட்டங்களில் 16-ம் தேதிவரை மழைபெய்யக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.