தமிழகம் பந்த்: கனிமொழி கைது!!
தமிழக முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்தன. போராட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை எழும்பூரில் ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் மற்றும் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவை கண்டித்து, சென்னை அண்ணாசாலையில், சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரத்தில், தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., எழிலரசன் தலைமையில் காஞ்சிபுரத்தில் மின்சார ரயில் மறியல் நடைபெற்றது, இதில் ஒன்றிய நகர செயலாளர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில், அக்கட்சி சட்டசபை துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையில் பிருந்தாவன் விரைவு ரயிலை மறிக்க முயன்ற 500க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.
வாலாஜாபாத்தில், காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் எம்.எல்.ஏ., க.சுந்தர் தலைமையில் வாலாஜாபாத்தில் மின்சார ரயில் மறியல் நடைபெற்றது, இதில் ஒன்றிய பேரூர் செயலாளர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் 1500 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில், நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை பேட்டையில் திருச்செந்தூர் பாசஞ்சர் ரயிலை மறிக்க முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூரில், விவசாய கூட்டுக்குழு, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் நடக்கும் ரயில் மறியல் போராட்டம் காரணமாக மின்சார ரயில்கள் தாமதமாக செல்கின்றன.