சென்னை: கடந்த ஏப்ரல் 30 அன்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு 2 வரங்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இதற்கு ஆசிரியர்கள் 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், ஆசிரியர்களின் பதிலை பெற்று அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்கள்.


சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து திருவண்ணாமலையை சேர்ந்த 4 ஆசிரியைகள் மேல்முறையீடு செய்தனர். இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, வாதங்களை கேட்டப்பின்னர், தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள தகுதித் தேர்வில் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும், அது வரை பணிபுரியும் ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் மாதாம் 2ஆம் வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.