பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் தேர்தலுக்கானது அல்ல: தம்பிதுரை
நாடாளுமன்ற தேர்தலுக்காக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்!
நாடாளுமன்ற தேர்தலுக்காக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் கூட ராணுவ நடவடிக்கையை ஆதரித்துள்ளதாகத் தெரிவித்தார். "தேர்தல் கூட்டணியில் தே.மு.தி.க இழுபறியாக இருப்பதுகுறித்து கேட்கிறீர்கள். தேர்தல் கூட்டணிகுறித்து பேச்சுவார்த்தை நடத்த தனிக் குழு உள்ளது. அவர்கள் முடிவுசெய்வார்கள். நல்லபடியாக அமையும். தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இது, நாட்டிற்கு மரியாதையையும், கௌரவத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ராணுவத்தின் வலிமையைக் காட்டுகிறது. இந்த விசயத்தில் இந்திய அரசைப் பாராட்டுகிறோம். பெருமைப்படுகிறோம். ராணுவ வீரர்களைப் பாராட்டுகிறோம். இந்தியா வலிமையான நாடு என்பதைக் காட்டியுள்ளது.
பா.ம.க கூடதான் அ.தி.மு.க-வை விமர்சனம் செய்தது. இது கொள்கை ரீதியான கூட்டணி கிடையாது. கூட்டணிக்காக அ.தி.மு.க கொள்கையை விட்டுக்கொடுக்காது. தேர்தல் கூட்டணி என்பது எதிரிகளை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்டது. காங்கிரஸ், தி.மு.க வெற்றி பெறக்கூடாது. அதற்காகத்தான் இந்தக் கூட்டணி. 'பா.ஜ.க-வை அ.தி.மு.க தூக்கிச் சுமக்காது எனக் கூறியிருந்தீர்களே, இப்போது அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே' என்று கேட்கிறீர்கள்.
பா.ஜ.க-வை வளர்க்கவோ, காலூன்ற, வேரூன்ற வைக்கவோ இந்தக் கூட்டணி கிடையாது. எங்கள் கட்சியை மட்டுமே நாங்கள் வளர்ப்போம். மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம். அதேநேரம், பயங்கரவாதிகளை ஒழித்ததை நாடே பாராட்டுகிறது. தீவிரவாதிகளின் எதிர் நடவடிக்கைகளைச் சந்திக்க, இந்தியாவுக்கு திராணி இருக்கிறது. பயங்கரவாதிகளை ஒழித்த மோடியைப் பாராட்டுகிறேன்" என்றார்.