கருவறை முதல் கல்லறை வரை இந்திய மக்கள் லஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ஒருவர், தனது பணி நீக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், கருவறை முதல் கல்லறை வரை தற்போது இந்திய மக்கள் லஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்திற்கு பதிலாக இச்சைக்கு இணங்க செய்யும் துரதிருஷ்டவசமான நிலையும் உள்ளதாக நீதிபதி வேதனை வெளியிட்டுள்ளார்.


சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றுவதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும், மக்கள் பிரதிநிதிகளே ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்து விடும் என நீதிபதி கூறினார். வாக்குகளின் புனிதத்தை சில வாக்காளர்கள் உணர்வதில்லை எனவும் நீதிபதி தெரிவித்தார். ஊழலுக்கு எதிராக போராடும் பாண்டவர்களை, ஊழல்வாதிகளான கவுரவர்களிடம் இருந்து நீதிமன்றங்கள் தான் பாதுகாக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி சுப்பிரமணியம், ஊழலுக்கு நீதித்துறையும் விதிவிலக்கு அல்ல என கூறியுள்ளார்.


ஊழல் செய்யும் நீதித்துறை அதிகாரிகளையும், அரசு அதிகாரிகளையும் தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் எனவும், இவர்களால் நாட்டின் வளர்ச்சி தடைபடுவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.