வேலூர் தொகுதியில் திமுக தன்னுடைய உண்மையான செல்வாக்கை பயன்படுத்தி வெற்றி பெறவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை மாடக்குளம் கிராமத்தில் தமிழக அரசின்  குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 85 லட்சம் செலவில் கண்மாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் 6000 ஏரி, குளங்கள், நீர் வழிச்சாலைகளை தூர்வாரி நிலத்தடி நீரை செறிவூட்டும் வகையில் 2017ல் ரூ.100 கோடி செலவில், 1519 ஏரி குளங்களும் தூர்வாரப்பட்டதாகவும், 2018ஆம் ஆண்டு 210 கோடி செலவில் நீர் நிலைகள் தூர்வாரப்பட்டதாகவும் தெரிவித்தார்.  


இந்தாண்டு 32 மாவட்டங்களில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு 1500-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டதாக குறிப்பிட்ட அவர், கண்மாய், நீர்நிலைகளை காப்பாற்றுவது நம் பொறுப்பு எனவும், நீர்நிலைகளில் பட்டா வாங்கியிருப்பது விவசாயிகளாக இருந்தாலும் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். 


வேலூரில் திமுக தன்னுடைய உண்மையான செல்வாக்கால் வெற்றி பெறவில்லை எனவும், சிறுபான்மையினரை திசை திருப்பி வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறிய அவர், அதிமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளதாகவும், எங்கள் ஆட்சியும், கட்சியும் நிலைத்திருக்கிறது என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 


திமுகவின் டி.ஆர்.பாலு, பாஜகாவும், திமுகவும் நண்பர்கள் என்று சொல்லி பாஜகாவோடு இணைய விரும்புவதாகவும், ஸ்டாலினின் எண்ணமே டி.ஆர்.பாலு பேச்சின் வெளிப்பாடு எனவும் தெரிவித்தார்.


மக்கள் நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், தமிழக நலனுக்காக பாராளுமன்றத்தை முடக்கிய கட்சி அதிமுக என்றும், தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை அதிமுக எதிர்க்கும் என தெரிவித்தார்.