அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் 19-ம் மற்றும் 20-ம் தேதிகளில் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல்வேறு சட்ட விரோத பணப்பரிவர்த்தனை குற்றங்களுக்காக டிடிவி தினகரன் மீது அமலாக்கத் துறை 2 வழக்குகளை பதிவு செய்தது. இதையடுத்து, தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அமலாக்கத்துறை அபராதம் விதித்தது.


சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி எழும்பூர் 2-வது பொருளா தார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.மலர்மதி முன்பாக இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. டிடிவி தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உயர் நீதி மன்ற வழக்கு விசாரணையைக் காரணம் காட்டி, இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்குமாறு கோரினர்.


அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த நீதிபதி, பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் இன்னும் குற்றச்சாட்டுகூட பதிவு செய்யப்படவில்லை. எனவே 19-ம் மற்றும் 20-ம் தேதிகளில் டிடிவி தினகரன் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் 19-ம் தேதி ஒரு வழக்கும், 20-ம் தேதி ஒரு வழக்கும் விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.