மதுரையில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு 8 மணி வரை நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவிப்பு!!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும்  காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் என இரண்டுமே ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. 5 ஆண்டுகள் வருமான வரி தாக்கல் செய்ததற்கான சான்றிதழ், குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.


ஆனால் அதே சமயத்தில், மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணையில் இருந்து வந்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. 


இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. அதே நேரத்தில், மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு இரவு 8 மணி வரை வாக்குப்பதிவுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 111 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.