மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சிஐடியூ தொழிற்சங்கம் தகவல் தெரிவித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 16-ம் தேதி முதல் ஊதிய உயர்வு கோரி சி.ஐ.டி.யு உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், மின்வாரிய ஊழியர்களுக்கான 2.57 காரணி ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


மின்வாரிய ஊழியர்களுக்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் பிப்.22-ம் தேதி கையெழுத்தாகவுள்ளது என்று சிஐடியூ தொழிற்சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.


மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்குவது காலதாமதமாகி வருகிறது.


இதை கண்டித்து கடந்த மாதம் 23-ம் தேதி அன்று சி.ஐ.டி.யு. மற்றும் பி.எம்.எஸ். ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் 22-ம் தேதி அன்று தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. 


அதில் 12-ம் தேதி ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் காணப்படும் என்று முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது அரசின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.


ஆனால், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல், மின்சார வாரிய ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, நடத்தப்பட்ட எந்த பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படாததால் சி.ஐ.டி.யு உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் 16-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.


இந்நிலையில், 2.57 காரணி ஊதிய உயர்வுக்கு அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் தற்போது தெரிவித்துள்ளன.


மேலும், 22-ம் தேதி புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.