தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கலாம் என நம்பப்படும் பகுதிகளில் இரத்தமாதிரி சோதனையை அதிக அளவில் நடத்த அரசு முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக அதிவிரைவு இரத்தமாதிரி சோதனைகளை மாநில அரசுகள் தொடங்கலாம் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு பரிந்துரைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சூழலில் இத்தகைய அதிவிரைவு இரத்தமாதிரி சோதனை உடனடி தேவையாகவே தோன்றுகிறது.


தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் கடந்த சில நாட்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் 418 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்து வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், நேற்று பிற்பகல் வரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால்  ஒருவர் மட்டுமே இறந்திருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி இந்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 400% அதிகரித்துள்ளது. இது தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 485 பேரில் 422 பேர் தில்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பான்மையானோர் தொடக்க நிலையிலேயே கொரோனா சோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதாலும், இவர்களில் பலர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்பதாலும் அவர்கள் வாழும் பகுதிகளில் கொரோனா பரவல் அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, எவருக்கேனும் கொரோனா அறிகுறிகள் உள்ளனவா? என்பது குறித்து தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இவ்வாறு ஒரே பகுதியில் கொரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்களில், ஐயத்திற்கு இடமானவர்கள் அனைவருக்கும் தொண்டைச் சளி எடுத்து நடத்தப்படும் கொரோனா (Polymerase Chain Reaction - PCR) ஆய்வு நடத்துவது சாத்தியமில்லை என்பதால், அதற்கு மாற்றாக  ரத்த மாதிரி சோதனை நடத்தலாம். காய்ச்சல், இருமல், தும்மல், மூச்சுத்திணறல், தொண்டை எரிச்சல் ஆகியவை கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். இவற்றில் 4 அல்லது 5 அறிகுறிகள் இருந்தால் மட்டும் தான் தொண்டைச்சளி எடுத்து ஆய்வு செய்ய முடியும். ஆனால், இரு அறிகுறிகள் இருந்தால் கூட இரத்தமாதிரி சோதனை நடத்த முடியும். தொண்டைச்சளி ஆய்வுக்கு இணையாக இரத்த மாதிரி  சோதனை முடிவுகள் துல்லியமாக இருக்காது என்ற போதிலும், மருத்துவ நடைமுறைகளின் அடிப்படையில் முடிவுகளின் தன்மையை யூகிக்க முடியும் என்பது மட்டுமின்றி, தேவைப்பட்டால் சந்தேகத்துக்கிடமான முடிவுகள் உள்ளவர்களிடம் மட்டும் தொண்டைச்சளி ஆய்வு நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் இப்போது வெளிநாடுகளுக்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ சென்று வந்தவர்கள்,  அவர்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இருப்பவர்களுக்கு மட்டும் தான் கொரோனா ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த வரையரைக்கு வெளியில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க ஆய்வுகளை விரைவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதற்கு இரத்தமாதிரி சோதனை தான் மிகச்சிறந்த தீர்வாகும்.


வழக்கமான தொண்டைச்சளி ஆய்வுடன் ஒப்பிடும் போது இரத்தமாதிரி சோதனை செலவு குறைந்தது ஆகும். அதுமட்டுமின்றி தொண்டைச்சளி ஆய்வு முடிவு தெரிய 5 மணி நேரத்திற்கும் அதிக நேரம் ஆகும் நிலையில், இரத்தமாதிரி ஆய்வு முடிவுகள் இரண்டரை மணி நேரத்தில் வெளியாகி விடும். மேலும் தொண்டைச்சளி ஆய்வை குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டும் தான் செய்ய முடியும். ஆனால், இரத்தமாதிரி ஆய்வை ஏராளமானவர்களுக்கு செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தின் இன்றைய அதிமுக்கியத் தேவை கொரோனா பரவலைத் தடுப்பது தான். அதற்கு கொரோனா பாதிப்புள்ளவர்களை கண்டுபிடிப்பதற்கான சோதனை அதிக எண்ணிக்கையில் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். எனவே, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கலாம் என நம்பப்படும் பகுதிகளில் இரத்தமாதிரி சோதனையை அதிக அளவில் நடத்த அரசு முன்வர வேண்டும்.