தண்டனை வழங்கிய பெண் உயர் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு - இளநிலை உதவியாளர் கைது
தண்டனை வழங்கிய தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிக்குழு திட்ட அலுவலருக்கு அலுவலகத்தில் வைத்து அரிவாளால் வெட்டிய இளநிலை உதவியாளர் கைது.
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிக்குழு மாவட்ட திட்ட அலுவலராக பணியாற்றுபவர் ராஜேஸ்வரி. மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று வழக்கம் போல பணியாற்றிக் கொண்டிருந்தவரை அதே அலுவலகத்தில் கடந்த 2015-16 ஆம் ஆண்டுகளில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய உமாசங்கர் என்பவர் அரிவாளால் வெட்டியுள்ளார் .
இதில் ராஜேஸ்வரி இடது கை மற்றும் தலையில் பலத்த காயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்தவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலை வெறிதாக்குதல் குறித்து காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் உமாசங்கர் தற்போது திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தாலுகாவில் பணியாற்றி வருகிறார். அவரது சொந்த ஊர் போடிநாயக்கனூர். ஒரே அலுவலகத்தில் பணியாற்றிய போது நடத்தை காரணமாக திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, உமா சங்கருக்கு தண்டனை வழங்கினார்.
இந்த தண்டனை காரணமாக உமாசங்கருக்கு பதவி உயர்வு பெற முடியாத நிலை இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விரோதம் காரணமாகவே கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே ஆய்வுகள் செய்த பின்பு மருத்துவமனைக்கு சென்று பெண் அலுவலரின் உடல்நிலை குறித்தும் விசாரித்தனர்.
இது தொடர்பாக அல்லிநகரம் காவல்துறையினர் உமாசங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் அலுவலரை அலுவலகத்தில் வைத்து இளநிலை உதவியாளர் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவத்தினால் அப்பகுதி முழுவதும் பெறும் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் படிக்க | மரம் அறுக்கும் இயந்திரத்தால் மனைவி மற்றும் பிள்ளைகளை அறுத்து கொன்ற ஐடி ஊழியர்!