ஊதிய உயர்வு பேச்சுவார்தைக்கு தமிழக அரசு கவுரவம் பார்க்கவில்லை!!
பேச்சுவார்த்தை நடத்துவதில் தமிழக அரசு கவுரவம் பார்க்கவில்லை, போக்குவரத்து தொழிலாளர்களே கவுரவம் பார்க்கின்றனர் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள சிஐடியூ அலுவலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 23 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.
அப்போது தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வரவில்லை என்றால் அனைத்து கோட்ட தலைமை அலுவலகம் முன் நாளை மாலை குடும்பத்துடன் போராட்டம் தொடரும் என்று தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் வலியுறுத்தினார்.
மேலும், போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கினால் எதிர்த்து போராடுவோம் என சிஐடியூ தலைவர் சவுந்தராஜன் கூறினார்.
இதற்கு விளக்கம் அளித்து பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்கத்துடன் 23 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை என்ற தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசு கவுரவம் பார்க்கவில்லை தொழிற்சங்க நிர்வாகிகள் தான் கவுரவம் பார்க்கிறார்கள் என கூறியுள்ளார்.போக்குவரத்துத்துறையில் கடும் நிதி நெருக்கடியிலும் ரூ.1,250 கோடி வழங்கப்பட்டது.
கிட்டத்தட்ட அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நல்ல ஊதிய உயர்வு என்று தெரிந்தும் கவுரவம் பார்த்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் தவறாக வழிநடத்துவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.